×

எடுத்த சபதம் முடித்த பிராடு... சச்சின் பாராட்டு

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு தான் எடுத்த சபதத்தை வெற்றிகரமாக முடித்ததாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. இந்த போட்டியில் தன்னை சேர்க்காதது குறித்து ஸ்டூவர்ட் பிராடு வெளிப்படையாகவே கடும் அதிருப்தி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மான்செஸ்டரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் பிராடு 2 இன்னிங்சிலும் தலா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து அணி 113 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 1-1 என சமநிலை ஏற்படுத்தியது. பரபரப்பான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 129 ரன்னுக்கு சுருண்டு 269 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2வது இன்னிங்சில் 4 விக்கெட் என 10 விக்கெட் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் அதிரடியாக 62 ரன் விளாசிய பிராடு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததுடன், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை கடந்துள்ள பிராடுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள தகவலில், ‘தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே சொல்லியபடி ஸ்டூவர்ட் பிராடு ஒரு லட்சியத்துடன் களமிறங்கி தான் எடுத்த சபதத்தை முடித்துள்ளார். 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய அவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது அதியற்புதமான சாதனை’ என்று வெகுவாகப் பாராட்டி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் பிராடு 7வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* 3வது இடத்துக்கு முன்னேற்றம்
டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், பிராடு ஒரேயடியாக 7 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (904 புள்ளி), நியூசிலாந்தின் நீல் வேக்னர் (843 புள்ளி) முதல் 2 இடங்களில் உள்ளனர். இந்திய வேகப் ஜஸ்பிரித் பூம்ரா 1 இடம் பின்தங்கி 8வது இடத்தில் உள்ளார்.

Tags : Brad ,Sachin , The oath taken, the finished brad, the praise of Sachin
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...